லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010) எனது தந்தை அமரர் வி.பி.கணேசன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தது கண்டி மாவட்டத்தின் அழகிய ஹம்பிட்டிய கிராமத்தில் ஆகும். கண்டி மாவட்ட மக்களுக்கு பணியாற்றுவது என்னை வளர்த்துவிட்ட மறைந்த எனது தந்தைக்கு நான் செய்கின்ற கைமாறாகும். எனவே அரசியல் தலைமையைத் தந்து கண்டி மாவட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இத்தகைய வாய்ப்பை வழங்குகின்ற கண்டி மாவட்ட மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்தார். கண்டி யட்டிநுவர வீதி பாய்வாஸ் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மனோ கண்டி வர்த்தக சங்க பிரமுகர்கள், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன், ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறியதாவது,
கண்டி மாவட்டத்தில் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 1994ம் வருட தேர்தலுடன் நின்றுபோய்விட்டது. அதற்கு பின் 2000ம், 2001ம், 2004ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. ஏனைய சகோதர இனத்தவர்கள் தங்களது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்கள். அவர்களை பார்த்து நாம் பொறாமைப்படாமல், பாடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல்களிலே தாம் விரும்பிய வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களிப்பதற்கும், வாக்கு கோருவதற்கும், எமது சொந்த பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும், ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை இருக்கின்றது. ஏனைய சகோதர இனத்தவர்களுக்கு இருக்கின்ற இந்த உரிமையை, நாமும் கோருவது ஒருபோதும் தவறாக முடியாது. உரிமைகளை தாரைவார்த்துவிட்டு வாழ்வது அடிமைத்தனமாகும். அது ஒருபோதும் உண்மையான இன ஐக்கியத்திற்கு வழி வகுக்காது.
பிரதிநிதித்துவத்தை தேடும் எமது கண்டி மாவட்ட பயணம் ஒரு ஜனநாயக பயணமாகும். அது எந்தவொரு சகோதர இனத்தவர்களுக்கும் எதிரான ஒரு பயணம் கிடையாது. உண்மையிலே இன்று சுமார் 16 வருடங்களுக்கு பிறகு கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தேடும் முயற்சியை பற்றி சிங்கள சகோதரர்களுக்கு சிங்கள மொழியிலேயே விளக்கமாக எடுத்துகூறியுள்ளேன். எமது எதிர்ப்பார்ப்பில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான கண்டி மாவட்ட சிங்கள வாக்காளர்களும் எமக்கு வாக்களிப்பதற்கு விரும்புகின்றார்கள். அதேபோல் தமிழ் மொழி பேசும் முஸ்லிம் சகோதரர்களும் என்னுடன் தங்களது ஐக்கியத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். முஸ்லிம் சகோதரர்களுக்கு என்னை ஆதரிப்பதற்கு மேலதிக காரணங்களும் இருக்கின்றன.
கடந்த காலங்களிலே தலைநகரிலே தமிழ் வர்த்தகர்களுடன் முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தல், கப்பம் ஆகிய தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை அநியாகமாக பறிகொடுத்தார்கள். தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களில் கணிசமானோர் இந்தியாவிற்கும், மலேசியாவிற்கு குடிபெயர்ந்தார்கள். இத்தகைய பயங்கரவாத சூழலில் அநீதிகளுக்கு எதிராக போராடியது நாங்கள் தான். இன்று வாக்குகளை வாங்குவதற்காக வரிசையாக வருபவர்கள் அன்று மௌனமாக இருந்துவிட்டார்கள். எமது போராட்டத்தின் காரணமாகவே சர்வதேசம் விழித்தொழுந்தது. அதனாலேயே இந்த கொடுமைகள் ஒரு முடிவிற்கு வந்தன. இது தலைநகர தமிழ் பேசும் வர்த்தக சமூகத்திற்கு நன்றாகத் தெரியும்.