(லங்கா தமிழ் நியூஸ் 29-03-2010) இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்துவிட்டதால், இலங்கை தமிழர்கள் எவரும் அகதிகள் என்ற போர்வையில் கடல்வழியாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று இந்திய கடலோரக் காவல்படை தடை விதித்துள்ளது.
அவ்வாறு எவரேனும் வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு கடலோர பாதுகாப்பு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர்.
இலங்கையில் போர் முடிவடைந்துவிட்ட போதிலும், அங்கிருந்து தமிழ் மக்கள் படகுகளில் அகதிகளாக தமிழ்நாடு வருவது இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்துவிட்ட நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த எவரும் இனி கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரக்கூடாது என்று இந்திய கடலோரக் காவல்படை எச்சரித்திருக்கிறது.
"இலங்கையில் போர் முடிந்துவிட்டதால், தமிழ் மக்களுக்கு இனி ஆபத்து இல்லை. எனவே, இலங்கையைச் சேர்ந்த எவரும், அவர்கள் தமிழ் மக்களாக இருந்தாலும் படகுகள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரக்கூடாது.
அவ்வாறு வந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடலோரப் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையைச் சேர்ந்த எவரேனும் இந்தியாவிற்கு அகதிகளாக வரவிரும்பினால், அதற்கான சட்டவிதிகளை பின்பற்றித்தான் வரவேண்டும்.
மாறாக கள்ளத்தனமாக படகுகளில் ஏறி தமிழ்நாட்டிற்கு வருவதை அனுமதிக்க முடியாது'' என்று கடலோரக் காவல்படை தளபதி சைனி பி.டி.ஐ.க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து பாதுகாப்பு அச்றுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடல்வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளது.
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்றுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகள் என்ற போர்வையிலோ, அல்லது மீனவர்கள் என்ற போர்வையிலோ இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைவது நல்லதல்ல.
எனவேதான், கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தவாரம்முதல் மிகக் கடுமையாகச் செயல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்'' என்று சைனி தெரிவித்தார்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்காமலேயே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இது கட்டுப்படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக வர தடைவிதிக்கப்பட்டிருப்பதைப் போலவே ஏற்கெனவே, அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்லவும் அனுமதிக்க முடியாது.
மன்னார் வளைகுடா, ஆதம்பாலம் ஆகிய பகுதிகளின் வழியாகத்தான் அகதிகளை மீனவர்கள் அழைத்துச் செல்கின்றனர். எனவே, இந்தப் பாதைகளில் 24 மணி நேரம் கண்காணிப்பை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம்'' என்றும் சைனி கூறினார்.